ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, 'ஆல்பாஸ்' என அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது.


 ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, 'ஆல்பாஸ்' என அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது.கடந்த ஜன., 19ம் தேதி முதல் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடக்கின்றன. பிற வகுப்புகளுக்கு, 'ஆன்லைன்' மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது. பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு பின் திறக்கப்பட்டதால், அனைத்து சனிக்கிழமைகளும் முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.


மாணவர்களுக்கு வருகைப்பதிவு கட்டாயமாகாததால், பிளஸ் 2 தவிர மற்ற வகுப்புகளில் வருகைப்பதிவு சொற்ப எண்ணிக்கையில் இருப்பதாக ஆசிரியர்கள் புலம்பினர்.இந்நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர் எண்ணிக்கை, 50 சதவீதமாக குறைந்து விட்டது. குறிப்பாக, சனிக்கிழமைகளில் மிக சொற்ப எண்ணிக்கையிலே மாணவர்கள் வருகை புரிகின்றனர்.

தேர்தல் பயிற்சி வகுப்புஇதுகுறித்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளிக்கு வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.இனிவரும் காலங்களில், தேர்தல் குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளதால், சனிக்கிழமை விடுமுறை வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, ஞாயிற்றுகிழமை தவிர பிற நாட்களில் தேர்தல் பயிற்சி அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முதல்கட்ட பயிற்சி மார்ச் 18ம் தேதியும், அடுத்தடுத்து, மார்ச் 26, ஏப்., 3, 5 ஆகிய தேதிகளிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது' என்றனர்.